Thursday, January 22, 2009

பெட்ரோல் விலையேற்றமும் பொருளாதார தடுமாற்றமும்!


பெட்ரோல், டீசல் விலை அவ்வப் போது உயர்வதும் விலையேற்றத்தைக் கண்டித்து எதிர்கட்சி போராட்டம் நடத்துவதும், கண்டன அறிக்கைகள் விடுவதும் நம் நாட்டில் வாடிக்கையாகி விட்டது. இந்த போராட்டங்கள் எல்லாம் வெறும் கண்துடைப்பாகவும் அரசியல் லாபத்திற்காகவும் நடத்தப்படுகிறது.
இன்றைய எதிர்கட்சி நாளைய ஆளும் கட்சியானாலும் பெட்ரோல் விலை ஏறத்தான் போகிறது. இதனால் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள்தான். இன்றைய நவநாகரீக காலத்தில் பெட்ரோலிய பொருட்கள் அத்தியாவசியமாகிவிட்டது. இவற்றில் விலைவாசி சிறிதளவு ஏறினாலும்கூட அது பெரிய பாதிப்பைதரும். அரசின் பொருளாதார வளர்ச்சியையே பதம் பார்த்துவிடும். பெட்ரோலுக்கு அவ்வளவு பவர் உருவாகிவிட்டது.
அப்படிதான் சென்ற மாதமும் நடந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. கடந்த 2004-ம் ஆண்டு 30 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை தற்போது 135 டாலருக்கு மேல் அதிகரித்து உள்ளது. அதற்கு ஏற்றப்படி பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருந்தால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம்.
அதாவது ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி. பதறிப்போன எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சரிக்கட்ட பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டன. மத்திய அரசும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலையை 5 ரூபாயும், கியாஸ் சி-ண்டர் விலையை 50 ரூபாயும் உயர்த்தியது. மண்ணெண்ணை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த விலை உயர்வின் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு 21 ஆயிரத்து 123 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும். ஆக பெட்ரோல் நிறுவனங்கள் எவ்வித பாதிப்புமின்றி தப்பித்துக் கொண்டன. முத-ல் ஏன் இந்த விலையேற்றம் என்பதை பார்த்துவிடுவோம்.
உலகில் அதிக பெட்ரோல் வளம் கொண்ட நாடுகள்
அரேபிய நாடுகள்தான். அவற்றில் அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடார், இந்தோனேசியா, ஈரான், ஈராக், குவைத், -பியா, நைஜுரியா, கத்தார், சவுதி
அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெனிசுலா ஆகிய 13 நாடுகள் வசம் உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40 சதவீதம் இருக்கிறது. இந்த நாடுகளெல்லாம் இணைந்து ஒபெக் (OPEC - Organisation of Petroleum Exporting Countries)என்ற அமைப்பை கொண்டுள்ளன. இந்த அமைப்புதான் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலையை நிர்ணயம் செய்துவருகின்றன. அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து விடக்கூடாது அதே சமயம் விலையும் குறைந்து விடக்கூடாது என்பதில் இந்த அமைப்பு கவனமாக இருக்கிறது. நமது கூட்டணிக்கட்சி ஆட்சியை போல. ஆட்சியும் நடத்த வேண்டும், ஆட்சியில் பங்கையும் கொடுத்துவிடக் கூடாது.
நவம்பர் 2006 -ல் எண்ணெய் விலை பீப்பாய்க்கு (1 பீப்பாய் 153 லிட்டர்) 50 டாலருக்கும் கீழே போய்விடக் கூடாது என்பதற்காக, தினசரி உற்பத்தியை 17 லட்சம் பீப்பாய்கள் வரை குறைத்தன. இப்போது மூன்று மாதங்களில் தினசரி உற்பத்தியை 3 கோடியே 23 லட்சம் பீப்பாய்களாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஓபெக் நாடுகள் உழவர் சந்தையை போன்றது. உற்பத்தி செய்தவர்களே விலைவைத்து விற்கின்றனர். இவர்கள் இந்த விலையேற்றத்துக்கு காரணமல்ல. விவசாயிகள் விளைவித்த உணவுதானியங்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் பதுக்கி, செயற்கையான விலையேற்றத்தை உருவாக்குபவர்கள் எப்படியோ, அப்படித்தான் கச்சா எண்ணெய் கள்ளமார்க்கெட்டால் தான் இன்று விலை தாறுமாறாக ஏறிவிட்டது. இதற் கான முழு முதல் காரணமே அமெரிக்காதான்.
அமெரிக்கா தொடர்ந்து உலகில் பொருளாதார ஆதிக்கத்தை நடத்தி வருகிறது. இன்றைய நூற்றாண்டில் பெட்ரோல் எண்ணெய்தான் தங்கத்துக்கு அடுத்த பொக்கிஷம். அதாவது திரவ தங்கம் (Liquid Gold). இதன் இருப்போ நிலையானது கிடையாது. இவற்றிற்கான தேவை என்றைக்கும் குறையாது. தேவை ஏறஏற, விலை கூடிக் கொண்டே போகும். இதில் போட்ட பணம் பலமடங்கு லாபத்தைத் தரும்.
அதேபோல பெட்ரோல் இருப்பு தனது கையிருப்பில் அதிகரிக்க அதிகரிக்க உலக பொருளாதார ஆதிக்கம் செலுத்தலாம் என்ற எண்ணத்துடன் அமெரிக்கா செயல்படுகிறது.
அமெரிக்காவின் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகம் இருப்பது பெட்ரோலிய பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு அரேபிய நாடுகளில் பெட்ரோல் நிறுவனங்களையும் அமைத்து ஆதிக்கம் செலுத்துகிறது அமெரிக்கா. இதனால் பெட்ரோல்மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு ஓபெக் அமைப்பின் கட்டுபாட்டை மீறி எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் அமெரிக்காவின் கை ஓங்கி இருக்கிறது. அதனால்தான் எப்போதெல்லாம் டாலரின் மதிப்பு சரிகிறதோ அப்போதெல்லாம் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. ஆக இன்றைக்கு விலை நிர்ணயிக்கும் திறன் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கையிலிருந்து நழுவி அமெரிக்கா போன்ற இடைத்தரகு நாட்டின் கையில் சிக்கிக் கொண்டது. சென்ற மாதங்களில் தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்ததை கண்டோம். அதே ஆன்லைன் வர்த்தகத்தின் யூக வாணிகம்தான் பெட்ரோலியத்திலும் நடக்கிறது. கடந்த வருடங்களில் பீப்பாய் ஒன்று 60 டாலருக்கு இருந்தது. இன்று 135 டாலருக்கு வந்துவிட்டது. இதில் 75 டாலர் என்பது யூக வாணிகம்தான்.
பெட்ரோல் விலையை பாதிக்கும் இன்னொரு அம்சம் அரசாங்கங்கள் போடும் வரி. அதாவது எக்சைஸ் வரி, கஸ்டம்ஸ் வரி, கல்வி வரி, டீலர் கமிஷன், வாட் வரி, போக்குவரத்துச் செலவு போன்றவை. இவையெல்லாம் பெட்ரோல் பொருட்கள்மீது போடும் போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கும் சுமார் 28 ரூபாய் வந்துவிடுகிறது. அடக்க விலை சுமார் 22 ரூபாய் சேர்ந்து
லிட்டர் பெட்ரோல் 50 ரூபாயைத் தாண்டிவிடும்.
இந்த முறை பெட்ரோல் விலையை ஏற்றிவிட்ட கையோடு மத்திய அரசு இவற்றின் மீதான வரியை குறைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் அதிவேக டீசலுக்கு தற்போது 7.5 சதவீத சுங்கவரி விதிக்கப்பட்டு வருகிறது. இது 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீதான உற்பத்தி வரியும் ரூ.1 குறைக்கப்படுகிறது. தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 14.35-ம், அதிவேக டீசலுக்கு ரூபாய் 4.6-ம் உற்பத்தி வரியாக விதிக்கப்படுகிறது. இதர பெட்ரோலியம் பொருட்களுக்கான விமான பெட்ரோல், நப்தாவுக்கு சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி
குறைப்பு மூலம் அரசுக்கு 22 ஆயிரத்து 660 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இதை தொடர்ந்து தமிழக அரசு டீசல் விலை உயர்வை சற்று குறைக்கும் வகையில் அதன் மீதான விற்பனைவரியை 2 சதவீதம் குறைத்துள்ளது. ஆனால் இது போதாது. தற்போது தமிழகத்தில் பெட்ரோல் மீது 30 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும், விற்பனைவரி விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனைவரி அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று கூறப்படுகிறது. இதில் கேலிக்கூத்தான விஷயம் என்னவென்றால் தமிழக முதல்வர் கேளிக்கைக்கு முழுமையான வரிவிலக்கு அளித்துள்ளார்.
அதாவது சினிமாவுக்கு தமிழில் பெயர்வைத்தால் வரிவிலக்கு. பலகோடிகள் புரளும் சினிமாவில் இந்த வரிவிலக்கால் பலகோடி அரசுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு. ஆனால் மக்களின் அத்தியாவசிய பயன்பாடான டீசல் மீது 2 சதவீத வரிகுறைப்பு என்பது மிகவும் குறைவு.
இந்தியாவில் 18 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 17 அரசு பொது நிறுவனங்கள். ஒன்று தனியார் நிறுவனம் (ரிலையன்ஸ் பெட்ரோலியம்) இந்த ரிலையன்ஸ் நிறுவனம் 2005-06 இல் 5915 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தது. அடுத்த இரண்டே வருடத்தில் 2007-07 இல் இந்த லாபம் 10,372 கோடியாகிவிட்டது. இந்த லாபத்தின் மீது வரி போட எந்த அரசும் முன்வரவில்லை. மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் பெட்ரோல் வியாபாரத்தில் பெரும் லாபம் அடைந்து வருகின்றன. இவை தன்னாட்சி உரிமை கொண்டவை. இவற்றின் லாபம் மத்திய அரசின் வரி இல்லாத வருவாய் இனத்தில் சேரும். நஷ்டத்தை மத்திய அரசுதான் சுமக்க வேண்டும்.
இந்தநிலையில் மே மாத இறுதியில் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையாளர்களின் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தி கொடுத்து,
அந்த சுமையை மக்கள்மீது சுமத்தியது. இவையெல்லாம் கலையப்பட வேண்டும். பெட்ரோலியத்தை தவிர்த்து, மாற்று எரிசக்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக சி.என்.ஜி
எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த வேண்டும். அதனால் சூழல் மாசுபடுவதும் குறையும், கட்டணமும் குறையும். அதேபோல பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் முறையினால் பெட்ரோல் செலவைக் குறைக்க முடியும். இந்தியாவில் சர்க்கரை ஆலைகளி-ருந்து ரசாயனத் தொழில் தேவைகளுக்குப் போக எஞ்சிய எத்தனால்
அளவே 120 கோடி லிட்டர் வரை இருக்கிறது. இவைகளை பயன்படுத்தப்பட வேண்டும். மக்கள் நலன் கருதி சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தால்தான், எதிர்காலத்தில் உணவுக்கும் எரிசக்திக்கும் பாதுகாப்பு வழங்க முடியும், இல்லையென்றால் எரிப்பொருள் நமது பொருளாதாரத்தை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.
- பிதாமகன்

1 comment:

  1. பெட்ரோலையே நம்பிக் கொண்டிருக்காமல் சூரிய சக்தியை பயன்படுத்துபவர்களுக்கு வரிச்சலுகை, வரி விலக்கு அளிக்க வேண்டும். சூரிய சக்தி பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் பெட்ரோலியத்தையே நம்பி இருக்க வேண்டியதில்லை. கையேந்த வேண்டியதில்லை.

    ReplyDelete